வேலையே இல்ல.. ரூட்ட மாத்தும் வீடு வாங்குவோர்…!!!
திருப்பதில மொட்ட அடிக்க இங்கயே டோக்கன் என்று ஒரு நகைச்சுவை காட்சியில் வருவதைப்போல எங்கோ ஒரு வங்கி திவாலானதும், உலக பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று கடந்த சில வாரங்களாக அமெரிக்க நிலவரம் நமக்கு கண்கூடாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி திவாலானதும், அமெரிக்காவில் பல டெக்னாலஜி ஊழியர்களுக்கு வேலையிழப்பும் வீடு விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.. பலருக்கும் தங்கள் வீடு வாங்கும் திட்டத்தில் தற்போது விருப்பம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. நிலையான வருவாயே இல்லாமல் எப்படி முதலீடு செய்ய முடியும் என்று கருதியுள்ள முதலீட்டாளர்கள், 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட மோசமான சூழலை சந்திப்பதாக ஆதங்கப்பட்டுள்ளனர். இதேபோல் தங்கள் வருவாய் குறைந்துவிடும் என்று ரியல்எஸ்டேட் தரகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து H1B விசாவில் அமெரிக்காவுக்கு சென்றவர்கள்தான் வீடுகளை வாங்க அதிக கவனம் செலுத்தியிருந்தனர். தற்போது டெக் நிறுவனங்கள் படிப்படியாக வேலைகளை காலி செய்து வருவதால் பணியாளர்கள் வேறு வழியின்றி தங்கள் சொந்த நாடுகளுக்கே செல்ல வேண்டியு கட்டாயமும் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவில் வீடுவாங்குவோரின் நிலை கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெரிய தொகைக்கு வீடுகளை வாங்கிய பணியாளர்களில் சிலர் வாங்கிய கடனுக்கு வழியும் இல்லாமல், அதனையே திரும்ப கட்டவும் முடியாமல் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.