மாற்றம் இருக்காது-டாடா ஸ்டீல்..
பிரிட்டனில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியில் யார் இருந்தாலும் தங்கள் வியூகங்களில் மாற்றம் இருக்காது என்று டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் கடந்த 15 ஆம் தேதி நடந்தது. இதில் அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என் சந்திரசேகரன் பங்கேற்றார். போர்ட் டல்பாட் பகுதியில் உள்ள இரண்டாவது உருக்கு ஆலையை மூட டாடா திட்டமிட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்து 800 பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. முந்தைய மற்றும் தற்போதைய புதிய பிரிட்டன் அரசாங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் தங்கள் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும், போர்ட் டல்பாட்டில் உள்ள உருக்காலையை நவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசாங்கம் அமைந்ததும் அது டாடா ஸ்டீலுக்கு பாதகமாக அமையும் என்று சிலர் பரவலாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், பிரிட்டன் அரசிடம் நல்ல நட்புறவு உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனத் தலைவரே தெளிவுபடுத்தியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். பிரிட்டன் ஊடகங்களின் தரவுகளின்படி , பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போர்ட் டல்பாட் பகுதியில் இருந்து ஆண்டுக்கு 3 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பிரிட்டனில் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் குறிப்பிட்ட ஆலையை மின்மயமாக்க பிரிட்டன் அரசு தீவிரம் காட்டியது. குறிப்பிட்ட ஆலையை நவீனப்படுத்த 1.25 பில்லியன் பிரிட்டன் பவுண்டு அளிக்க கடந்தாண்டு செப்டம்பரில் பிரிட்டன் அரசாங்கம் மற்றும் டாடா ஸ்டீல் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.