“விமானத்துக்கு கொடுத்த கடனில் நகை வாங்கினார்கள்”
ஜெட் ஏர்வேசின் முதலாளியாக நரேஷ் கோயல் என்பவர் இருக்கிறார். இவரின் நிறுவனம் அடுக்கடுக்கான பல சிக்கல்களை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வருகிறது.இந்நிலையில் இவர் மீது எழுந்த புகார்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் தங்கள் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.அதில் நரேஷ் கோயலும் அவரின் மனைவியும் சேர்ந்து விமான நிறுவனத்துக்கு வாங்கிய கடனில் நகைகளை வாங்கியதாக குற்றம்சாட்டியது. பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனில் 1,152 கோடி ரூபாய் கன்சல்டிங் பீசாக வழங்கப்பட்டதும், 2,500 கோடி ரூபாயை ஜெட்லைட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் நரேஷ் கோயல் கைதாகினார். அவருக்கு வரும் செப்டம்பர் 11 வரை 14 நாட்கள் கஸ்டடி அளித்து மும்பை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பெற்ற கடனில் 9 கோடியே 46 கோடி ரூபாயை சொந்த செலவுக்கு எடுத்துக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த பணத்தில் வீட்டுக்கு பர்னிச்சர், நகைகள் வாங்கியதாகவும் சாடியுள்ளது. 848 கோடி ரூபாய் கடனை கனரா வங்கி கோயல் குடும்பத்துக்கு அளித்துள்ளது. அதில் 538 கோடி ரூபாய் பணம் திரும்ப வங்கிக்கு செலுத்தவில்லை என்பதே புகாராகும். 2011-2019 காலகட்டத்தில் பணம் இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அமலாக்கத்துறை இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில் ஆகஸ்டில் இருமுறை கோயலுக்கு சம்மன் அளித்தும் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.