பேங்க்ல போடத்தான் விரும்புகிறார்கள்…
இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் மக்கள் தங்கள் வசம் இருந்த 2,000ரூபாய் நோட்டுகளை அதிகளவில் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். சில்லறை மாற்றுவதைவிடவும், வங்கியில் டெபாசிட் செய்வதுதான் சிறப்பான முடிவு என்று 80 விழுக்காடு இந்தியர்கள் நினைக்கின்றனராம். ஒரு முறையில் 20,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டாலும்,டெபாசிட் செய்ய எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்தியாவின் பிரதானமான 6 அரசு மற்றும் தனியார் வங்கிகளில்தான் மக்கள் அதிகம் தங்கள் பணத்தை டெபாசிட் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 170 பில்லியன் ரூபாய் இதுவரை டெபாசிட்டாக கிடைத்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதால் வங்கிகளில் நிதி கையிருப்பும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம்தான் இறுதி கெடுவாக உள்ள நிலையில் அந்த மாதத்தில் மட்டும் 2.7 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு பணம் டெபாசிட் ஆக வாய்ப்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மொத்த டெபாசிட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மட்டும் 22 முதல் 25 விழுக்காடாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.