இது சூப்பர் காம்போ…
உலகளவில் ஸ்மார்ட்போன் சிப்களுக்கு பெயர்பெற்ற குவால்காம் நிறுவனம் இந்திய அரசு மற்றும் டாடா குழுமத்துடன் இணைந்து புதிய டீலை மேற்கொள்ள இருக்கிறது. ஆனால் இந்த முறை செல்போன்கள் அல்ல கணினி சிப்களை கையாள டாடாவின் உதவியை குவால்காம் நாடியுள்ளது. ஸ்னாாப்டிராகன் எக்ஸ் என்ற சிப் உருவாக்குவதில் இந்திய பொறியாளர்களின் பங்கு மிகப்பெரியதாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குவால்காம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆகாஷ் பால்கிவாலா இது பற்றி விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில்,பிரதமர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பால்கிவாலா குறிப்பிட்டுள்ளார். பேக்கேஜிங் வசதிக்காக டாடா குழுமத்தின் உதவியை குவால்காம் நாடியுள்ளது உண்மைதான் என்றும் பால்கிவாலா ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போதுதான் 5ஜி மெல்ல மெல்ல தலைதூக்கி வரும் நிலையில்,குவால்காம் 6ஜி சேவைகள் சார்ந்த பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நெட்வொர்க்குகளுடன் 6ஜிக்கான பணிகளை செய்து வருவதாக பால்கிவாலா குறிப்பிட்டுள்ளார்.
6ஜி தொழில்நுட்பத்துக்கான பணிகளில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு, ஆப்ரேட்டர்கள் மற்றும் வெண்டார்களிடம் தேவைப்படுவதாக பால்கிவாலா கூறியுள்ளார். செல்போன்களே நவீன கம்ப்யூட்டர்களாக மாறியுள்ளதாக கூறியுள்ள அவர்,தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் லேப்டாப் ஃபார்ம் ஃபேக்டர்களுக்கு உகந்தபடி தயாராவதாக குறிப்பிட்டுள்ளார். தங்கள் நிறுவனத்துக்கு போட்டியாக இன்டெல் மற்றும் AMD நிறுவனங்கள் இருப்பதாக கூறியுள்ள பால்கிவாலா,Oryon CPU உருவாக்க பெரிய தொகையை முதலீடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் பணிகளை செய்ய இருப்பதாக குவால்காம் நிறுவன அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு விரைவில் ஒரு உதவியாளர் போல செயல்படும் என்றும், அதற்கு ஏற்றபடி மாறுதல்கள் செய்யப்படுவதாகவும் பால்கிவாலா குறிப்பிட்டுள்ளார்.