புதிய மாவட்டங்களில் வரப்போகும் டைடல் பார்க்குகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமா?
சென்னையில் இருக்கும் டைடல் பார்க் போலவே, தமிழ்நாட்டில் வேலூர், விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பினால் இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டைடல் பார்க் இந்த நகரங்களுக்கு வந்தால், அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் மற்றும் அவர்கள் வேலை வாய்ப்புத் தேடி பெங்களூரு, சென்னை என்று அலையத் தேவையில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இளைஞர்களுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கு 225 கோடி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் ₹3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள் வரவிருக்கின்றன. மகளிர் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு 762 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாகன உற்பத்திப் பூங்கா வரவிருக்கிறது. கோவையில் ராணுவத் தளவாட உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 4,500 கோடியில் தூத்துக்குடியில் அறைகலன் (furniture) தயாரிப்பு பூங்கா உருவாக்கப்படவுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.