டைட்டனின் சந்தை மதிப்பு அபாரம்..
நவம்பர் 21 ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை டைட்டன் நிறுவனத்தின் பங்குகள், 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி டைட்டன் நிறுவனம் தனது முதல் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த 1 லட்சம் கோடியை எட்டிப்பிடிக்க வெறும் 2 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதாவது 2021-ல் இந்த நிறுவன சந்தை மூலதன மதிப்பு 2 லட்சம் கோடியாக அக்டோபர் 7 ஆம் தேதி மாறியது. இந்நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் சந்தை மூலதனம் 3 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இதனால் சந்தை மூலதன அடிப்படையில், இந்தியாவின் மதிப்பு மிக்க 17ஆவது பெரிய நிறுவனமாக டைட்டன் உருவெடுத்திருக்கிறது. மறைந்த தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு மிகவும் பிடித்த பங்காக டைட்டன் பங்குகள் திகழ்ந்தன. செப்டம்பர் 30ஆம் தேத நிலவரப்படி ராகேஷின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவிடம்தான் டைட்டன் நிறுவனத்தின் 5.37% பங்குகள் இருக்கின்றன. அதாவது ரேகாவிடம் மட்டும் 16,000கோடி ரூபாய் அளவுக்கு டைட்டன் நிறுவன பங்குகள் இருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் டைட்டன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 32.39%அதிகரித்திருக்கிறது.