இவ்வளவு சரிந்துவிட்டதா? இன்னும் சரியுமா?
கிரிப்டோ கரண்சிகளில் மிக முக்கியமான கரண்சியாக பார்க்கப்படும் பிட்காயின், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கிரிப்டோ கரண்சி என்றாலே பிட்காயின் தான் அனைவரின் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு பிட்காயின் என்ற பெயர், மக்களை கிரிப்டோ கரண்சியின் பக்கம் இழுந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
சில நூறு ரூபாயிகளில் தொடங்கி பல லட்சம் வரை மதிப்பை பெற்ற பிட்காயின், தற்போது பல மடங்கு சரிந்துள்ளது. பிட்காயின் சரிவு மற்ற காயின்களின் மதிப்பையும் குறைத்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஒரு பிட்காயினின் விலை சுமார், 69 ஆயிரம் டாலர் வரை அதிகரித்த நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு பிட்காயினின் விலை 20 ஆயிரத்து 289 டாலராக உள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் இருந்த விலையை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு பிட்காயினின் விலை, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 70 சதவிதம் சரிந்துள்ளது. இன்று மட்டும், ஒரு பிட்காயினின் விலை சுமார் 7.8 சதவிதம் சரிந்துள்ளது.
தொடர்ந்து சர்வதேச அளவில் கிரிப்டோ கரண்சியை வர்த்தகர்கள் விற்பனை செய்து வருவது தான் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான செல்சியஸ், தனது வாடிக்கையாளர்கள், கிரிப்டோ கரண்சியை விற்பனை செய்து பணமாக மாற்றவும், கிரிப்டோ கரண்சியை ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றுவதற்கும் அனுமதி மறுத்த நிலையில், கிரிப்டோ கரண்சி குறித்த அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு குறித்த அச்சமும், இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 102 மில்லியன் டாலர் அளவிற்கு கிரிப்டோ கரண்சிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசு கிரிப்டோ கரண்சிகளுக்கு இன்னும் அங்கிகாரம் வழங்காத நிலையிலும், இந்தியாவில் கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அளவில் நடந்த நிகழ்வுகல், கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது. இந்த சரிவும் இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.