டாடா ஸ்டீல்ஸ்க்கு உதவும் டச் அரசு..
நெதர்லாந்தில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையை முழுமையாக சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத பசுமை ஆற்றலாக மாற்ற டச் அரசாங்கம் 3.26பில்லியன் அமெரிக்க டாலர் உதவி செய்ய இருக்கிறது. குறிப்பிட்ட அந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேடுகளும், உடல்நலக்குறைவுகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கில் டச் அரசாங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது. டச் அரசாங்கத்தின் இந்த முடிவால் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6.6 விழுக்காடு உயர்ந்து 169.45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டாடாவின் அந்த ஆலைக்கு அருகில் வசிப்போரின் சராசரி ஆயுட்காலம் 2.5 மாதங்கள் குறைவாக இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஆலையில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் டைஆக்சைடு காரணமாக நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு 4 விழுக்காடாக இருப்பதாக கூறப்படுகிறது. 3 விழுக்காடு குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பும் ஏற்படுவது உறுதியானது. ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப்போலவே அரசாங்கத்தின் உதவியால் டாடாவின் பசுமை ஸ்டீல் ஆலை இயங்கப்போவதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் எவ்வளவு இறுதி நிதி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை டச் அரசாங்கம் வெளியிடவில்லை.