1 பில்லியன் டாலரை நோக்கி…!!!
இந்தியாவின் பல நகரங்களில் பலரும் மின்சார ஸ்கூட்டர் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இந்த சூழலில் முன்னணி மின்சார ஸ்கூட்டர் நிறுவனமாக உள்ள ஏத்தர் நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் 1 பில்லியன் டாலர் வருவாயை இலக்காக கொண்டுள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்தின் நிறுவனரான தருண் மேத்தா பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில், அண்மையில் 170-180 மில்லியன் டாலர் முதலீட்டை அந்த நிறுவனம் இதுவரை ஈட்டியுள்ளதாகவும்,அந்த நிறுவனத்தின் மதிப்பீடு 800 மில்லியன் டாலராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் நடப்பு மாதத்தில் கிடைத்துள்ளதாகவும் தருண் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் மட்டும் ஏத்தர் நிறுவனம் 344 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ள அவர் விரைவில் அந்நிறுவனம் லாபகரமாக மாறும் என்றும் நடப்பாண்டின் இறுதிக்குள் ஏத்தர் நிறுவனம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பெருந்தொற்றுக்கு முன்னதாக மொத்தமாக 3ஆயிரம் ஏத்தர் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டிருந்த சூழலில் தற்போது 90 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். துவக்கத்தில் ஒன்றிரண்டு நகரங்களில் மட்டுமே இருந்த ஏத்தர் நிறுவன விற்பனை மையங்கள் தற்போது 50 நகரங்களில் உள்ளது என்றார். அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொதுவான சார்ஜ் நிலையங்களை வைக்கத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ள தருண்,2024-ம் ஆண்டில் தங்கள் ஸ்கூட்டர்களில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார். விரைவில் புதிய பட்டன்கள் உள்ளிட்ட அம்சங்களை தொடுதிரையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், தற்போது உள்ளதை விட மேம்படுத்தப்பட்ட மேம் வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தருண் தெரிவித்துள்ளார்.