செல்போன் நம்பர பல வருஷம் வச்சிருந்தா அதுக்கும் காசா….
செல்போன் நம்பர்களை நீண்ட நாட்கள் வைத்திருக்கும் நபர்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்க டிராய் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு நம்பரை நீங்கள் குறைவாக பயன்படுத்திவிட்டு கிடப்பில் போட்டால் அதனை வேறு நபர்களுக்கு தராமல் இருக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். 21கோடியே 91 லட்சம் சிம்கார்டுகள் அதாவது மொபைல் எண்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நம்பர்களை வேறொரு நபருக்கு தர முடியாமலும், அதே நபர் ரீசார்ஜ் செய்யாமல் பெயரளவுக்கு வைத்திருக்கும் நிலையால் என்ன செய்வது என்று புரியாத நிலையில் தொலை தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் புதிய திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. நம்பர்களுக்கான தனிக்கட்டணத்தை ஒரு முறை வசூலிப்பதா இல்லை ஆண்டுக்கு ஒரு முறை வசூலிப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட செல்போன் எண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கூட வசூலிக்கலாம் என்று டிராய் கூறியுள்ளது. ஆனால் இப்படி செய்வதன் மூலம் வைக்கோல் போருக்குள் ஊசியை தேடும் கதைதான் என்கிறார்கள் நிபுணர்கள். ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அந்நாட்டுடன் இந்திய தொலைதொடர்புத்துறையை ஒப்பிடக்கூடாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் செல்போன் எண்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்போது அவர்களிடம் இருந்து பணம் வசூலித்தால் அது தங்களுக்கு இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் தொலை தொடர்பு நிறுவனங்கள். இதற்கு பதிலாக செயல்பாட்டில் இல்லாத சிம்கார்டுகளை இறந்த சிம்கார்டுகளாக கருதும் காலத்தை மாற்றியமைக்கலாம் என்று தொலை தொடர்பு நிறுவனங்கள் யோசனை தெரிவிக்கின்றன