அமெரிக்க நாணயத்தில் டிரம்ப் படம் ?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கௌரவிக்கும் வகையிலும், அமெரிக்காவின் 250-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், அவரது உருவப்படம் பொறித்த $1 நாணயத்தை அடுத்த ஆண்டு வெளியிட அமெரிக்க அரசின் கருவூலத் துறை திட்டமிட்டுள்ளது.
அந்த நாடு நிறுவப்பட்டதன் 250 ஆண்டு நிறைவைக் குறிக்கும் அந்த நாணயத்தின் முதல் பிரதியில், ஒரு பக்கத்தில் டிரம்பின் முகமும், “கடவுளை நாங்கள் நம்புகிறோம்” என்ற வார்த்தைகளும், 1776 மற்றும் 2026 தேதிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நாணயத்தின் மறுபக்கத்தில், 2024ல் பென்சில்வேனியாவில் டிரம்ப் முன்னெடுத்த பிரச்சார பேரணியில், அவர் மீது நடந்த கொலை முயற்சியில் இருந்து தப்பிய சில நிமிடங்களில் அவர் தன் முஷ்டியை உயர்த்திய காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் பேசிய “போராடு, போராடு, போராடு” என்ற சொல்லாடல் அந்தப் பக்கத்தின் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உயிரோடு உள்ளவர்களின் படத்தை அமெரிக்க டாலர் மற்றும் நாணயங்களில் பொறிக்க தடையுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வெளியீடு சட்ட சிக்கல்களை எதிர் கொள்ள வாய்ப்புள்ளது.
“ஒரு முடியாட்சியின் தோற்றத்தைத் தவிர்க்க, அமெரிக்க டாலர் மற்றும் நாணயத்தில் இறந்த நபர்களின் உருவப்படங்களை மட்டுமே இடம்பெறச் செய்வது நீண்டகால பாரம்பரியமாகும். அந்த பாரம்பரியம் 1866 ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்டத்தின் மூலம் சட்டமாக மாறியது,” என்று சான் பிரான்சிஸ்கோவின் பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
