டிரம்ப்பின் அடுத்த ஆட்டம்..
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க ஆட்டோமொபைல் மற்றும் எஞ்சின் உற்பத்திக்கான மானியங்களை விரிவுபடுத்துவதற்கும், நவம்பர் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகள் மற்றும் பாகங்கள் மீது புதிய 25% வரிகளை நிர்ணயிப்பதற்கும் உத்தரவுகளில் நேற்று கையெழுத்திட்டார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்படும் இந்த வரிகள், வெளிநாடுகளில் இருந்து ஆட்டோமொபைல் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஆனால் அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் மெக்சிகோவிற்கு இது பெரிய அடியாக இருக்கும். இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மீதும் டிரம்ப் 10% வரியை விதித்துள்ளார்.
இந்த உத்தரவின் படி, 2030 வரை அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கான விற்பனை விலையில் 3.75% அளவுக்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளிக்கப்படும். இதனால் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரிகளை ஓரளவு ஈடுகட்ட முடியும்.
அமெரிக்கவில் உற்பத்தி செய்யப்படும் எஞ்சின்கள், நடுத்தர மற்றும் கனரக லாரிகளின் விற்பனை விலையில் 3.75% அளவுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய வரி விதிப்புகள், பெரிய அளவு பிக்-அப் லாரிகள், நகரும் லாரிகள், சரக்கு லாரிகள், டம்ப் ரக லாரிகள் மற்றும் 18 சக்கர வாகனங்களுக்கான டிராக்டர்கள் உட்பட, 3ஆம் பிரிவு முதல் 8ஆம் பிரிவு 8 வரையிலான லாரிகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளார்.
இந்த இறக்குமதி வரி விதிப்பு அமெரிக்காவின் லாரி உற்பத்தியாளர்களை “நியாயமற்ற வெளிப்புற போட்டியிலிருந்து” பாதுகாக்கும் என கடந்த மாதம் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் அமெரிக்க வர்த்தக சபை, லாரி இறக்குமதி வரிகளை விதிக்க வேண்டாம் என்று டிரம்பை வலியுறுத்தியிருந்தது. அமெரிக்காவிற்கு லாரிகள் ஏற்றுமதி செய்யும் டாப் 5 நாடுகளான மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பின்லாந்து ஆகியவை அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்றும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் அவை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டது.
இந்த 3.75% மானிய உதவி, 2026 ஏப்ரல் வரை அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு அடுத்த ஓர் ஆண்டுக்கு 2.5% அளவுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
