இந்திய மாணவர்கள் பற்றி டிரம்ப் பேச்சு..
அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளவரான டொனால்ட் டிரம்ப், ஒரு பேட்டியில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள், அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு சொந்த நாடுகளுக்கு செல்வதை தடுக்கும்புதிய திட்டம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு தங்கள் தாய்நாட்டுக்கே சென்று அங்கு மிகப்பெரிய கோடீஸ்வரர்களாவதாக கூறினார். வேறு நாட்டுக்காரர்கள் அகதிகளாக அமெரிக்காவிற்கு வருவதையே விரும்பாத டிரம்ப், திடீரென தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பானது, அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள் அங்கேயே தங்குவதற்கான கிரீன் கார்டு கிடைக்க வழி வகை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கும் அகதிகளுக்கு அமெரிக்க குடியுரிமை தரலாம் என்று ஒரு ஆய்வில் 59 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு மட்டும் அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அமெரிக்க விசா கிடைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 210 இடங்களில் பல வெளிநாடுகளில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிமான மாணவர்கள் கடந்தாண்டு உயர்கல்விக்காக சேர்ந்துள்ளனர். கடந்த முறை டிரம்ப் ஆட்சியில் இருந்தபோது எச்1 பி விசா முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிரம்பின் இந்த நேர் எதிர் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.