சில பைக்குகளை திரும்பப்பெறும் டிவிஎஸ்..
தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ள டிவிஎஸ் குழுமம், அண்மையில் ஐகியூப் என்ற மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கடந்தாண்டு ஜூலை 10 முதல் செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் உற்பத்தி செய்யப்பட்ட சில வாகனங்களை மட்டும் திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்ஜ் டியூப் என்ற பாகத்தை ஆராய்ந்த போது சில நெருடல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட தேதிகளுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தேவைப்பட்டால் ஒரு பைசா கூட வாங்காமல் குறிப்பிட்ட பாகத்தை இலவசமாக பழுதுநீக்கித்தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வாகனங்களை வாங்கியவர்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்தோ அல்லது டிவிஎஸ் டீலர்களிடம் இருந்தோ தொலைபேசி அழைப்பு வரலாம் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம்தான் ஐகியூப் ரகத்தில் புதிய வாகனங்களை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியது. அதில் ஐகியூப் பைக்குகளில் ஐகியூப், ஐகியூப் எஸ் மற்றும் ஐகியூப் எஸ்டி ஆகிய மாடல்கள் அடங்கும். இதில் முதல் ரகம் மட்டும் ஒரு முறை சார்ஜ் போட்டால் நூறு கிலோமீட்டர் செல்லும் என்றும் மற்றவை அனைத்தும் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்றும் டிவிஎஸ் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த வகை பைக்குகளில் 7 அங்குல தொடுதிரை அலெக்சா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் டிஜிட்டல் ஆவணங்களை சேமிக்கும் வசதியும் இந்த புதிய வண்டியில் உள்ளது. இதுமட்டுமின்றி 32 லிட்டர் அளவுக்குசேமிப்பு வசதியையும் இந்த வண்டி கொண்டுள்ளது. இந்த வகை வண்டிகள் அதிகபட்சமாக மணிக்கு 78 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடியது.