டெஸ்லா ஆலையை பார்வையிட்ட மத்திய அமைச்சர் கோயல்..
இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருப்பவர் பியூஷ் கோயல்.இவர் அண்மையில் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அங்குவைத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்தார். அப்போது இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மஸ்க் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இதற்கு அடுத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் ஃப்ரீமென்ட் பகுதியில் உள்ள டெஸ்லா ஆலைக்கு சென்றதாக அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனத்தில் நிர்வாகப் பதவிகளில் இந்திய பொறியாளர்களும், இந்திய நிதி வல்லுநர்களும் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
டெஸ்லாவுக்கு ஏற்கனவே பல மூலப்பொருட்கள் இந்தியாவில் இருந்து செல்லும் நிலையில் அதனை இரட்டிப்பாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கோயல் குறிப்பிட்டார். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ்,டிரோன்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள்,அதிநவீன வேதியியல் செல்கள் உற்பத்திக்கு என பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஊக்கத் தொகையை டெஸ்லா பெற இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை.
2021-ல் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதால் இந்தியாவில் தங்கள் கிளையை திறக்கவில்லை என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து கடந்தாண்டு முதல் டெஸ்லாவை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது வரை 40ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு 100விழுக்காடு இறக்குமதி வரியை இந்திய அரசு விதித்துள்ளது.40ஆயிரம் டாலர்களுக்கும் குறைவாக உள்ள வாகனங்களுக்கு 70விழுக்காடு இறக்குமதி வரி வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.