நகரங்களில் யுபிஐதான் பிரதான தேர்வு…
கியர்நே இந்தியா மற்றும் அமேசான் பே இணைந்து இந்தியாவின் நகரங்களில் டிஜிட்டல் பேமண்ட் முறைகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தினர். அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியாவின் நகர்புறங்களில் மக்கள் டிஜிட்டல் பேமண்ட் முறைகளைத்தான் கடைபிடிக்கின்றனராம். குறிப்பாக மக்களின் அன்றாட செலவுகளுக்கு கூட டிஜிட்டல் பேமண்ட்ஸ்தான், நாடு முழுவதும் 120 நகரங்களில் 6 ஆயிரம் பேர், ஆயிரம் வணிகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் முடிவில் 90 விழுக்காடு மக்கள் டிஜிட்டல் பேமண்ட்களைத்தான் நகரங்களில் செய்வதாகவும், சில பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்வதாக 50 விழுக்காடு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வணிகர்களும் 69 விழுக்காடு தங்கள் பரிவர்த்தனைகளை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளதாக கூறியுள்ளனர். சிறுநகரங்களிலும் 65 விழுக்காடு மக்கள் டிஜிட்டல் பேமண்ட்தான் செய்வதும் தெரியவந்துள்ளது. 25 முதல் 59 வயதுள்ளோர்தான் டிஜிட்டல் புரட்சியில் பங்கேற்றுள்ளதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது. விரைவாகவும், பாதுகாப்பாகவும் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதும், ரிவார்டுகள் உள்ளிட்டவை அளிக்கப்படுவதால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தேர்வு செய்வதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மற்றொரு புள்ளி விவரத்தின்படி, ஆன்லைன் வணிகத்தில் பொருட்களை வாங்க யுபிஐ முறைதான் அதிகம் பேரின் முதல் தேர்வாகவும், கார்டுகள்,டிஜிட்டல் வாலட்களை பயன்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வு, இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாக ஆய்வு நடத்திய நிறுவனம் குறிப்பிட்டது.