விரைவில் வருகிறது யுபிஐ லைட் வாலட்டில் புது வசதி
கடந்த சில ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி எடுத்த சிறப்பான முன்னெடுப்பு எனில் அது யுபிஐ என்று கூறலாம். இந்நிலையில் யுபிஐ லைட் வாலட்டில் தானாக விவரங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகமாக இருப்பதாக அந்த வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். அண்மையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவு குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதையும் அறிவித்தார். எளிமையாக சொல்ல வேண்டுமெனில் யுபிஐ லைட் வாலட்களில் எவ்வளவு பணம் தானாக வைக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும்பட்சத்தில் அது வங்கிக்கணக்கில் இருந்து தானாக லைட் வாலட்டுக்கு வந்துவிடும் வகையில் பணிகள் நடக்கிறது என்றார். தற்போது வரை யுபிஐ லைட் வாலட்டில் ஒரு வாடிக்கையாளர் 2 ஆயிரம் ரூபாய் வரை லோட் செய்ய முடியும் மேலும் 500 ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளை வாலட்டில் இருந்து செய்ய முடியும். அண்மையில் நடந்து முடிந்த நிதி கொள்கை கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதம் மாற்றக்கூடாது என்று 4 பேரும் மாற்றலாம் என்று 2 முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர். இதையடுத்து 8 ஆவது முறையாக ரெபோ வட்டிவிகிதம் 6.5 விழுக்காடாகவே இருக்கிறது. 2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7-ல் இருந்து 7.2 விழுக்காடாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணிப்புகளை கடந்து 8.2விழுக்காடாக இருந்தது என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார்.