2029-ல் 20 நாடுகளுக்கு செல்லும் யுபிஐ..

ரிசர்வ் வங்கியும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்தின் சர்வதேச பிரிவும் இணைந்து 2029 ஆம் ஆண்டுக்குள் 20 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக யுபிஐ மற்றும் ரூபே ஆகிய நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. தெற்காசிய ஒத்துழைப்பு நாடுகள் எனப்படும் சார்க் நாடுகளுடன் இணைந்து இந்த விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. விரைவான பணப்பரிமாற்ற முறைக்காக பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளின் மத்திய வங்கிகளுடன் இணைந்து இந்த விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கடந்தாண்டு ஜூலையில்தான் ரிசர்வ் வங்கிக்கும், ஐக்கிய அரபு நாடுகளின் மத்திய வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகளின் பணப்பரிவர்த்தனை கட்டமைப்புகளும் தரவுகளை பரிமாறிக்கொள்ள இயலும். இந்தியாவின் யுபிஐ வசதியும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐபிபி அமைப்பும் இணைந்து தரவுகளை பகிர்ந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் யுபிஐ நிறுவனமும் ரூபே நிறுவனமும் இணைந்து யுபிஐ வசதியை மொரீசியசில் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தின. இதேபோல் பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவின் யூபிஐ வசதியை இலங்கையிலும் அறிமுகப்படுத்தியது. இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்து அங்குள்ள கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள இயலும். கடந்தாண்டு ஜூன் மாதமே நேபாளின் ராஷ்ட்ர வங்கியுடன் ரிசர்வ் வங்கி யுபிஐ குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இப்போது வரை பிரான்ஸ் மற்றும் நேபாளத்தில் யுபிஐ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 7 நாடுகளில் இந்தியர்கள் யுபிஐ வசதியை பயன்படுத்திக் கொள்ள இயலும்.