அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி..
விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கியான அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் பல பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை மாற்றாமல் அப்படியே தொடர இருப்பதாக அந்த வங்கியின் தலைவர் ஜெரோம்பாவல் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி இந்தாண்டு கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 1 முறை மட்டுமே குறைக்க முடியும் என்று அந்த வங்கி அறிவித்துள்ளது. இதன்படி கடன்கள் மீதான வட்டி விகிதம் 5.25 முதல் 5.50 விழுக்காடாகவே தொடரும் என்று கூறப்படுகிறது. விலைவாசி உயர்வை 2 விழுக்காடு என்ற அளவுக்குள்ளேயே வைக்க இந்த முயற்சி உதவும் என்று பெடரல் ரிசர்வ் கூறுகிறது. அமெரிக்க வாடிக்கையாளர் விலை குறியீடு மே மாதத்தில் 3.3 விழுக்காடாக உள்ளது. பூஜ்ஜியம் புள்ளி 1 விழுக்காடு அளவுக்கு ஏப்ரலைவிட இது குறைவாகும். பணவீக்கத்தை குறைக்கும் வரவேற்கத்தக்க முயற்சி இது என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். மொத்தம் மூன்று முறை கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று ஃபெட் வங்கி கூறி வந்த நிலையில் தற்போது ஒரு முறை மட்டுமே அந்த அளவு குறைப்பு நடக்கும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூறியுள்ளது. இந்தாண்டு இறுதியில் குறிப்பாக செப்டம்பரில் மட்டுமே வட்டி குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்க அரசின் இந்த தரவுகள் சந்தைகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.