9000 பேரின் வேலையை காலி!!!!
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலையில் பெரிய நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் ஆட்குறைப்பை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இந்த பட்டியலில் இடம்பிடிக்காத ஒரே நிறுவனம் என்றால் அது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே, ஆனால் இந்த பட்டியலில் அதிகம் பேரை வேலையை விட்டு நீக்கயது யார் என்று கணக்கிட்டு பார்த்தால் அதில் அமேசான் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனம் கொரோனா காலத்தில் கூட பம்பரமாய் சுழன்று கொள்ளை லாபம் சம்பாதித்தது. ஆனால் தற்போது 9 ஆயிரம் பேரை மேலும் வேலையை விட்டு தூக்க இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் இணைய சேவைகள்,மனிதவளம் மற்றும் விளம்பரப்பிரிவில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரியில்தான் இந்த நிறுவனம் உலகின் பல நாடுகளிலும் உள்ள தனது கிளைகளில் 18ஆயிரம் பேரை வேலையில் இருந்து கருவேப்பிலை போல தூக்கி எரிந்தது. 2022ம் ஆண்டு வரை மட்டுமே அமேசான் நிறுவனத்தில் 15 லட்சம் பேர் உலகளவில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமேசானின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் சிக்கன நடவடிக்கையாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் கடந்தவாரம் 10ஆயிரம் பேரை தூக்கியதும்,கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் பேரின் வேலையை காலி செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு தொடங்கியதில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு இதுவரை டெக் நிறுவனங்களில் வேலை பறிபோய் உள்ளது