விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட் ஆலை; இழப்பு ₹14,749 கோடி?!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதாரத்திற்கு சுமார் ₹14,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. மூடப்பட்ட ஆலை விற்பனைக்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.
மே 2018 இல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் இருந்து பொருளாதாரத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட இழப்பு சுமார் ₹14,749 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் கன்ஸ்யூமர் யூனிட்டி அண்ட் டிரஸ்ட் சொசைட்டியின் (CUTS International) தொகுப்பு அறிக்கையின்படி, ஆலை மூடப்பட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த இழப்பு தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) சுமார் 0.72% ஆகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக சுட்டதில் 13 பேர் இறந்தனர். இதனையடுத்து நிறுவனம் மூடப்பட்டது.