விஜய் மல்லையாவுக்கு செபி தடை..
பெரிய தொகையை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவிடம் இருந்து பணத்தை மீட்க முடியாமல் பலரும் தவித்து வரும் நிலையில் அவர் மறைமுகமாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து விஜய் மல்லையா பங்குச்சந்தையில் நேரடியாக பங்கேற்க 3 ஆண்டுகள் தடையை செபி விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 26 ஆம் தேதி செபி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பங்குகளை வாங்கவும், விற்கவும் விஜய் மல்லையாவுக்கு தடை விதிப்பதாகவும், அவர் சார்ந்த நிறுவனங்களும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விதியை மல்லையா மீறியுள்ளதாக செபியின் பொது மேலாளர் அனித்தா அனூப் தெரிவித்துள்ளார். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு வந்ததாகவும், அதில் விஜய் மல்லையா ஹெர்பெர்ஸ்டன் அன்ட் யூனைட்டட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டட் என்ற பெயரில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு 6.15 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. சொந்த கம்பெனியை வேறொரு பெயரில் துணை கணக்காக உபயோகித்து வந்த விஜய் மல்லையாவின் கணக்குகளை தடை செய்வதாகவும் செபி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.