தொடர்ந்து விழும் வோடஃபோன் நிறுவன பங்குகள்!!!
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 24 லட்சத்து 71 ஆயிரம் பேர் வெளியேறி வேறு நிறுவனத்தின் சேவையில் இணைந்துள்ளனர். இது தொடர்ந்து 21 மாதமாக ஏற்படும் சரிவாகும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் வோடஃபோன் ஐடியா நிறுவன பங்கின் விலை 2.7% சரிந்து 7 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கடந்த 2021 ஏப்ரலில் இருந்து இதுவரை அந்நிறுவனம் 4 கோடியே 24 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் 2கோடியே 42 லட்சம் பேர் வோடபோனை விட்டு வெளியேறியுள்ளனர். அரசாங்கத்துக்கு தரவேண்டிய கடனுக்கு பதிலாக பங்குகளாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. வோடபோன் நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை அரசு பங்குகளாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் வோடபோனில் இருந்து வெளியேறியோரில் 15.26 லட்சம் பேர் ஏர்டெலுக்கும்,ஜியோவுக்கு 17.08 லட்சம் பேரும் மாறியுள்ளனர்.