டாப் 20 திவால் லிஸ்ட் கண்காணிங்க..
இந்திய நிதியமைச்சகம் தனது பொதுத்துறை வங்கிகளை கண்காணிப்பை தீவிரப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக திவாலாகும் சூழலில் இருக்கும் 20 வழக்குகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், தேவையற்ற கடன்களின் நிலை குறித்து அறிக்கை அளிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் தலைமை பதவியில் இருப்பவர்களுடன், நிதித்துறை செயலர் விவேக் ஜோஷி அண்மையில் கலந்துரையாடினார். அப்போது, திவால் நோட்டீஸ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய சொத்து மறுகட்டுமான நிறுவனத்தின் (NARCL)நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து நிதியமைச்சகம் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறது. NARCL என்ற அமைப்பை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து கட்டமைத்துள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு NARCLநிறுவனத்துக்கு 30,600 கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டது.
அதன்படி மோசமான கடன்களில் 15விழுக்காடு வரை NARCL பணம் செலுத்திவிடும். மீதமுள்ள 85விழுக்காடு பணம், அரசு உறுதியளித்த ரிசிப்டுகள் மூலம் பெறப்படும். கடந்த 2021-22 நிதியாண்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் மோசமான வாராக்கடன்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வங்கிகளில் வாராக்கடன்களாக மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் வரை நிலுவையில் இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.