என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டுதான் இருக்கோம்!!!!.
கொரோனா வந்த பிறகு மக்கள் ஆரோக்கியமான பொருட்களை தேடித் தேடி சாப்பிடும் சூழல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பால் மற்றும் பால் சார்ந்த ஆரோக்கியமான உணவுகளை மக்கள் அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவாக இந்தியாவில் பால் சார்ந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கும் விநியோகத்துக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. இதனை கண்காணித்து வருவதாக மத்திய பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.இடைவெளி அதிகமாகும்பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து பால்சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து தேசிய பால்வளம் சார்ந்த முன்னேற்ற அமைப்பு பரிசீலித்து வருவதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலின் தேவை கோடை காலத்தில் அதிகரித்துள்ளதால் அதனை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திடீரென வெளிநாடுகளில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாது என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியிருக்கிறது. உள்ளூரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய பால் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து பால் இறக்குமதி செய்வதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.அவ்வாறு பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.