தடையின்றி இயங்குகிறோம்-கோடக் வங்கி..
தகவல் பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விட்டுள்ளதாக கோடக் மகிந்திரா வங்கியை மண்டையில் குட்டியுள்ள ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் சேர்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோடக் மகிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி அஷோக் வஸ்வானி வாடிக்கையாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் புதிய வாடிக்கையாளர்களைத்தான் இணைக்க முடியாதே தவிர்த்து ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை தடையின்றி வழங்குவோம் என்றும், ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், விரைவில் புதிய கிரெடிட் கார்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியுடன் நல்ல நட்புறவுடன் இருக்கும் தங்கள் நிறுவனம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனே சரிபார்க்கும் என்று கடிதத்தில் அசோக் கூறியுள்ளார். சந்தை மூலதனத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான கோடக் வங்கி , குறிப்பிட்ட தடையை உடனடியாக ஏற்கத்தான் வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு பிறகு கோடக் வங்கியின் பங்குகள் 12 விழுக்காடு வரை குறைந்து வியாழக்கிழமை ஒரு பங்கு 1,620 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.