போலி சாமியார் ஆனந்த் சுப்ரமணியன்.. CBI தகவல்.!!
NSE முறைகேடு வழக்கின் முகம் தெரியாத சாமியார் ஆனந்த் சுப்ரமணியன்தான் என சிபிஐ தெரிவித்துள்ளது.
முடிவுகள் எடுத்த முகம் தெரியாத சாமியார்:
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சாமியாரின் உத்தரவின்பேரில், சித்ரா ராமகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆனந்த் சுப்ரமணியனை 2013-ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் NSE-யின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தார். படிப்படியாக ஆனந்த் சுப்ரமணியத்தின் ஊதியம் அதிகரிக்கப்பட்டு, 2015-ம் ஆண்டில் 5 கோடியை எட்டியது. அத்துடன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும், வசதிகளும் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு தரப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்ததாக செபி தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
போலி சாமியார் ஆனந்த்:
இந்நிலையில், இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார். அந்த மின்னஞ்சல் மூலம் மிக முக்கியமான, நுட்பமான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிர்ந்து வந்துள்ளனர் என்று சிபிஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். NSE-யில் நடந்த முறைகேடுகள் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அமைப்பு அதிகாரிகளின் துணையுடன் நடைபெற்றதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.