மூத்த குடிமக்கள் சலுகைகளை பறிப்போரை என்னவென்று சொல்வது…
கொரோனா என்ற ஒற்றை அரக்கன் உலகின் பல கோடி மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது என்றால் அது பொய் இல்லை. கொரோனாவை விட கொடுமையான சில பாவிகளும் தேசத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என பலர் புலம்பும் நிலைக்கு அரசாங்கம் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதில் ஒன்றுதான் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு சலுகை கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்ப அளிக்கப்படவே இல்லை. கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிலர் மனுக்களும் தாக்கல் செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அதனை பரிசீலிக்க மறுத்துவிட்டது. நீதீமன்றத்துக்கு சென்றாவது நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம்,இது மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு என்று மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் திரும்ப அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.ஆனால் இதுவரை அது அமல்படுத்தப்படவே இல்லை. அப்படி என்ன சலுகை என்றால் 60வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் ரயிலில் பயணித்தால் 40 விழுக்காடு தள்ளுபடியும்,58 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் ரயிலில் பயணித்தால் 50 விழுக்காடு டிக்கெட் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்ததுதான் அந்த சலுகை. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.