அதானி குறித்து செபி சொல்வது என்ன?
அதானி குழுமத்தின் மீதான புகார்கள் குறித்து இந்திய பங்குச்சந்தை ஒழுங்குப்படுத்தும் செபி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கூற உள்ள கருத்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் மீதான புகார்களை விசாரிக்கத் தொடங்கி ஏன் பாதியில் நிறுத்தப்பட்டது என்பது குறித்து செபி உச்சநீதிமன்றத்தில் கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குள்ளான வகையில் வெளிநாடு பணம் கைமாறியது தொடர்பாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் 2014ஆம் ஆண்டே தகவல் தெரிவித்ததாகவும், அது பற்றிய விசாரணை 2017ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் புகார்களை தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கை மீண்டும் செபி கையில் எடுத்து விசாரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டே அதானி குழுமம் வெளிநாட்டு பணத்தை முறைகேடாக வணிகத்தில் கொண்டுவந்ததாக வெளியான தகவலை செபி அலட்சியப்படுத்தியதாக நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தற்போது செபி உச்சநீதிமன்றத்தில் பதில்தர இருப்பதாக கூறப்படுகிறது. வருவாய் புலனாய்வுத்துறை ஏற்கனவே 2014-ல் அதானி குழுமத்துக்கு உபகரணங்கள் செல்வது குறித்து செபிக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் 2017-ல் புகார்கள் ரத்து செய்யப்பட்டன. அதானி குழுமம் வேறொரு நாட்டு நிதியை சட்ட வரோதமாக பயன்படுத்தியதாக கூறப்படும் புகார்கள் குறித்து உச்சநீதிமன்றம் தனியாக ஒரு விசாரணையும், செபி ஒரு விசாரணையையும் செய்து வருகின்றன. இரு தரப்பின் விசாரணைகளையும் உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. நீதிமன்றத்தில் செபி என்ன சொல்லப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.