அமெரிக்காவில் நடந்தது என்ன? இன்னொரு 2008ஆ?
சிலிக்கான் வேலி வங்கி என்பது அமெரிக்காவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் ஒரு வங்கி. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நல்ல லாபம் பெற்று வந்த இந்த வங்கி, தனது சொத்துக்களை பாதுகாப்பாக வைக்க, அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருந்தது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து வட்டியை அதிகரித்து வருவதால், கடன் பத்திரங்களில் மதிப்பு வாங்கிய விலையை விட குறைய தொடங்கியது.
இந்த நேரத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, சிலிக்கான் வேலி வங்கியில், டெபாசிட் செய்து இருந்தல் பணத்தை வெளியே எடுக்க தொடங்கினர். பணம் வேண்டும் என்று டெபாசிட் செய்தவர்கள் கேட்கும் போது, அவர்களுக்கு கொடுக்க, தன்னுடைய சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை சிலிக்கான் வேலி வங்கிக்கு ஏற்பட்டது. விலை குறைவாக விற்றதன் மூலம் மட்டும் சிலிக்கான் வேலி வங்கிக்கு, சுமார் 16 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த வங்கி திவால் என்று அறிவிக்கப்பட்டு, Federal Deposit Insurance Corporation கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த வங்கியில், டெபாசிட்தாரர்களின் பணம் மட்டும் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் சிக்கி உள்ளது.
இந்திய வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும், வங்கி திவால் ஆகும் போது 5 லட்சம் ரூபாய் தான் கிடைக்கும். அதாவது அந்த தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டு இருக்கும். அது போல், அமெரிக்காவை பொறுத்தவரை, 2 லட்சம் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை காப்பீடு செய்யப்பட்டு இருக்கும். இந்த வங்கி தற்போது Federal Deposit Insurance Corporation கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளதால், எவ்வளவு பணம் வைத்து இருந்தாலும், அதன் டெபாசிட் தாரர்களுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைக்கும்.
அமெரிக்காவில் மிகவும் மதிப்பு மிக்க வங்கி என்று போர்ப்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட பட்டியலில், தற்போது திவால் என்று அறிவிக்கப்பட்டு உள்ள சிலிக்கான் வேலி வங்கிக்கு 20வது இடம் கொடுக்கப்பட்டது. இந்த பட்டியல் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே இந்த வங்கி திவால் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.