சுனில் மிட்டல் சொல்லும் ஆருடம் என்ன?.
பிரபல பார்தி குழும நிறுவனங்களின் உரிமையாளர் சுனில் மிட்டல். இவர் அண்மையில் இந்திய பொருளாதாரம் பற்றி ஆக்கபூர்வமான கருத்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் சுனில் மிட்டல் தனது உரையை நிகழ்த்தினார். அதில் வியாபாரம் செய்ய வேண்டுமானால் ஒரு நல்ல தலைமை வேண்டும்,நிலையான அரசு வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி உலகத்தலைவர்களில் முக்கியமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்போது பேசிய மிட்டல், இந்திய பொருளாதாரம் 3.5 டிரில்லியன் அமெரிக்கடாலரில் இருந்து வரும் 2027ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களை தாமே சொந்தமாக கண்கூடாக பார்ததாகவும் மிட்டல் கூறியுள்ளார். தொலைத்தொடர்புத்துறையில் இந்தியா மிகமுக்கியமான வளர்ந்துவிட்ட நாடாக உள்ளதாகவும் கூறிய அவர்,தாங்கள் வளர்ந்த சூழலில் தொலைதொடர்புத்துறை இத்தனை வளர்ச்சி அடையவில்லை என்றும் தற்போது தொலைவில் உள்ள கிராமத்தினரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிவேக 5ஜி இணைய வசதி உள்ள நாடாக இந்தியா உள்ளதாக குறிப்பிட்ட மிட்டல், 2024 மார்ச் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைத்துவிடும் என்றார். 5ஜி சேவைக்காக 2 லட்சம் பேஸ்ஸ்டேஷன்களை 8 மாதங்களில் நிறுவியுள்ளதாகவும் மிட்டல் பெருமிதம் தெரிவித்தார். தொலைதொடர்புத்துறையால் இந்திய பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 1.5 விழுக்காடு உயர்ந்துள்ளதால் இந்த வளர்ச்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார். தற்போதே கிராமங்களில் கூட இணைய சேவை சாதாரணமாக கிடைப்பதாக கூறிய அவர், 5ஜி சேவைமூலம் டிரோன் உள்ளிட்ட சேவைகளும் எளிதில் கிடைக்கும் என்றார்.