அது என்ன ஜூன் 5-ஆம் தேதி கணக்கு?
பாப்பம்பட்டி அணி மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது என்ற காமெடி போல ஆகிவிட்டது அமெரிக்காவின் நிலை. கடன் உச்சவரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஜானட் எலன் பல மாதங்களாக கூறி வருகிறார். ஆனால் இதற்கு செவிசாய்க்காமல் இருந்த அரசு, இறுதி கெடு விதித்ததும் ஓடோடி வந்து என்ன பிரச்சனை என்று பார்த்து வருகிறது. புலி வருது புலி வருது என்று புருடா விட்டு வந்தது போல அமெரிக்க அரசிடம் இன்று காலியாகும்,நாளை காலியாகும் என்று அந்தம்மாவும் ஓயாமல் தேதி குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் தீர்வுதான் கிடைத்தபாடில்லை.இந்த சூழலில் அமெரிக்காவில் ஜூன் 5ஆம் தேதிக்கு பிறகு அரசு திட்டங்களை செயல்படுத்த சுத்தமாக பணம் இருக்காது என்று குறிப்பிட்டு ஜானட் தனது சக எம்பிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனவரி 19ஆம் தேதியே அதிகபட்ச கடன் வரம்பான 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் கடன் வரம்பை அமெரிக்கா எட்டிவிட்டது. எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்து வைத்து கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கு இசைவு கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் பைடன் நம்பிக்கையில் உள்ளார். இந்தம்மாவுக்குத்தான் கணக்கு தெரியவில்லை என்று எதிர்க்கட்சியினர் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் தன்னால் முடிந்தவரை சிறப்பாக சிக்கனப்படுத்தி, பல்வேறு நடவடிக்கை எடுத்ததால் தான் 4 நாட்கள் கூடுதலாக ஓட்டமுடிவதாகவும் ஜானட் எல்லன் தெரிவித்துள்ளார். பண நெருக்கடியின் பாதிப்பு ஏற்கனவே தெரியத் தொடங்கிவிட்டதாக கூறியுள்ள ஜானட்,விரைந்து கடன் உச்சவரம்பை உயர்த்தவேண்டும் என்று கடிதத்தில் கதறியுள்ளார்.
என்னநடக்குமோ காத்திருப்போம்…