மோடி-மஸ்க் சந்திக்க காரணம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்திப்பது உறுதியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது அங்கு மஸ்க்கும்-மோடியும் சந்தித்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது குறித்து ஆலோசித்தனர். விரைவில் இந்தியாவிற்கு டெஸ்லா வரும் என்றும் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில் இப்போது இந்தியாவுக்கு வரும் மஸ்க், டெல்லா ஆலை கட்டுமானப்பணிகளை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. 2-3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலையில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டள்ளது. அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மின்சார வாகன கொள்கையில் 29.2லட்சம் ரூபாய் அளவுள்ள மின்சார கார்களை இந்தியாவில் தயாரித்தால் அதற்கு 15 விழுக்காடு மட்டுமே வரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வின்பாஸ்ட் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் களமிறங்க சாதக சூழல் ஏற்பட்டுள்ளது. அட்டகாசமான தயாரிப்பான டெஸ்லா கார்கள் விற்பனை உலகளவில் மந்தமாக இருக்கிறது. முதல் காலாண்டில் 387000கார்களை மட்டுமே டெஸ்லாவால் விற்க முடிந்துள்ளது. எதிர்பார்த்ததை விட குறைவான அளவே கார்கள் விற்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரே ஆண்டில் டெஸ்லாவின் பங்குகள் சுமார் 30 விழுக்காடு வரை சரிந்துள்ளன. மாடல் 3 ரக கார்கள் 39 ஆயிரம் டாலர்களாக விற்கப்படும் நிலையில் மாடல் 2 ரக கார்களை 25 ஆயிரம் டாலர்கள் விலைக்கே விற்கவும் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வளவு கம்மியாக திட்டமிட்டாலும் அதைவிட குறைந்த விலைக்கு சீன நிறுவனங்கள் மின்சார கார்களை தருவதால் மஸ்க் கலக்கத்தில் உள்ளார். இந்தியாவில் பயணிகள் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பை உயர்த்தவும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. உலகளவில் குறைவான விலையில் விற்கப்படும் சீன மின்சார கார்களைவிட டெஸ்லா நிறுவனத்துக்கு இந்தியாவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.