என்னடா இது..,சைபர் டிரக்குக்கு வந்த சோதனை
இந்த உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தது டெஸ்லா என்ற மின்சார கார் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் ஒரு சரக்கு வாகனத்தை உருவாக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த வாகனத்தின் பெயர்தான் சைபர் டிரக். அண்மையில் இந்த சைபர் டிரக்கை விற்க முடியாமல் வாடிக்கையாளர் ஒருவர் புலம்பியது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பல்வேறு முக்கிய விதிகளை சைபர் டிரக் நிறுவனம் விதித்துள்ளது. குறிப்பாக வாங்கிய ஒரு வருடத்திற்குள் சைபர் டிரக்கை விற்கக் கூடாது என்று டெஸ்லா நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் பெரிய தொகை கொடுத்து சைபர் டிரக்கை வாங்கிய நபர், அதனை நிறுத்த தங்கள் வீட்டில் இடம் இல்லாததால் அதனை விற்க நபர் ஒருவர் முடிவெடுத்தார். ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் கட்டுப்பாடுகளால் புதிய சைபர் டிரக்கை விற்க முடியவில்லை என்று அந்த பயனர் கருத்து தெரிவித்தார். பிளையன் ராடான் என்பவர் இது தொடர்பாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். தாம் ஆசை ஆசையாய் வாங்கிய சைபர் டிரக்கை நிற்க வைக்க தனது வீட்டில் இடம் இல்லை என்றும், இதனால் மீண்டும் சைபர் டிரக்கை விற்க முடிவு செய்ததாகவும், ஆனால் டெஸ்லாவின் ஒப்பந்தத்தின்படி அதையும் செய்ய முடியவில்லை என்றும் புலம்பியுள்ளார். ஒரு டேப் எடுத்து அளந்த பிறகு தான் நீங்கள் சைபர் டிரக்கை வாங்கியிருக்க வேண்டும் என்று பலரும் குறிப்பிட்ட பதிவை செய்தவரை நக்கல் செய்து வருகின்றனர். வாங்கிய ஒரு வருடத்திற்குள் டெஸ்லாவின் சைபர் டிரக்குகளை விதிகளை மீறி ஓராண்டுக்குள் விற்றால், 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் டெஸ்லா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது