கோதுமை விலை உயர்வு…
இந்தியாவில் கோதுமையின் விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் பண்டிகைகாலம் அடுத்தடுத்து வருவதாலும்,உற்பத்தி குறைவாலும் விலை உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமைக்கான இறக்குமதி வரி அதிகரிப்பும் உள்நாட்டு சந்தையில் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக கூறப்படுகிறது. கோதுமை விலை அதிகரிப்பு மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 5 மாநில தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு மெட்ரிக் டன் கோதுமையின் விலை 1.6%உயர்ந்து,27,390 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் கோதுமையின் விலை 22%வரை உயர்ந்துள்ளது. இப்போது வரை 40%இறக்குமதி வரி உள்ளது.இதனை குறைக்க எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இறக்குமதி வரியை நீக்கினால் வெளிநாடுகளில் இருந்து அதிக கோதுமையை இறக்குவோம் என்று வணிகர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தானிய கிடங்கில் 24 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது. 37.6மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து இந்த அளவு தற்போது குறைந்திருக்கிறது.
இந்தாண்டு மட்டும் விவசாயிகளிடம் இருந்து 26.2 மில்லியன் மெட்ரிக்டன் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்திருக்கிறது. 34.15மில்லியன் டன் கோதுமை இதற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டது.மத்திய அரசு கணித்த அளவைவிட 10% குறைவாகவே கோதுமை கொள்முதல் நடந்திருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். வரியை குறைக்கவில்லை என்றால் இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் விலை 30 ஆயிரம் ரூபாயை தொடும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.