உலக வங்கியின் தலைவராகிறாரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்?
அமெரிக்காவின் வாஷிங்க்டனில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது உலக வங்கி, பல நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் தருவது இந்த வங்கியின் முக்கிய அம்சமாகும். உலகவங்கியின் பெரிய பங்குதாரராக அமெரிக்கா திகழ்கிறது.இந்த வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் என்பவர் இருக்கிறார். இவர் தனது பணிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பதவி விலக உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இந்த சூழலில் டேவிட்டுக்கு மாற்றாக யாரை தேர்வு செய்வது என தேடல் நடந்துவந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்காவை பரிந்துரைப்பதாக கூறியுள்ளார். வரும் மார்ச் 29ம் தேதி வரை உலகவங்கியின் தலைவரை தேர்வு செய்ய கால அவகாசம் உள்ளது. உலக வங்கிக்கு பெண் தலைவர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.இந்த நிலையி்ல் 63 வயதாகும் அஜய் பங்காவை பரிந்துரைப்பதாக பைடன் தெரிவித்துள்ளார். யார் இந்த அஜய் பங்கா என்று விசாரித்துப்பார்த்தால் அவர், ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை சமாளிப்பதில் பங்கா சிறந்தவர் என்று பாராட்டியுள்ள பைடன், பொதுமக்கள் தனியார் இணைந்து பயணிக்க வேண்டிய திட்டங்களில் சிறப்பான அனுபவம் கொண்டவர் பங்கா என்றும் புகழ்ந்துள்ளார்.