ஏன் ஆப்பிள் ரிப்பேர் மட்டும் அவ்ளோ கஷ்டம்?
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் வெறும் பந்தாவுக்கு மட்டுமில்லங்க,செயல்திறனிலும் அட்டகாசம்தான் என்கிறார்கள் அதனை பயன்படுத்துவோர், ஆனால் ஆப்பிள் போன் ரிப்பேர் ஆனால் அதில் உள்ள பிரச்சனை என்ன என்பதை விளக்கி சொல்லி இருக்கிறார் அந்நிறுவனத்தின் மூத்த வன்பொறியாளர் ஜான் டெர்னஸ். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அத்தனை எளிதில் பழுதாவது கிடையாது என்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அடிக்கடி பழுது ஏற்படாது என்பதால் குறைவான பொருட்களும், வேஸ்டேஜ் குறைவாகவும் இருக்கும் என்பதே ஆப்பிளின் தத்துவம் என்றும் கூறியுள்ளார். பேட்டரிகள் நீண்டகாலம் வரும் நிலையிலும், ஐபோன்களில் தண்ணீர் புகும் புகார்களிலும் பெரிய மாற்றத்தை அந்நிறுவனம் செய்திருப்பதாகவும், ஐபி68 ரேட்டிங்கின்படி தொடக்க காலத்தில் இருந்த சிக்கல்களை தற்போது ஆப்பிள் நிறுவனம் சரி செய்திருப்பதாகவும், தண்ணீர் புகுந்து செல்போன் வீணாகும் புகார்கள் கணிசமாக குறைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். தண்ணீருக்குள் விழுந்த செல்போன்கள் பல நாட்கள் கழித்து எடுத்தாலும் பயன்படுத்த முடிவதாக பலர் கருத்து தெரிவிக்கும் நிலையில் அத்தனை அளவு சீல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆப்பிள் தரப்பில் இப்படி விளக்கம் தரப்படும் நிலையில் இத்தனை பெரிய தொகை கொடுத்து செல்போன் வாங்கினாலும், எளிதில் அவற்றை சரி செய்ய முடிவதில்லை என்று மற்றொரு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.