ஏன் மின்சார வாகனங்கள் வாங்குவதில்லை?
வரும் ஆண்டு மின்சார வாகனங்களை மக்கள் வாங்கும் அளவு மிதமாகத்தான் இருக்கும் என்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சைலேஷ் சந்திரா கருத்து தெரிவித்துள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்திருக்கும் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் சந்தையில் அதிக மின்சார வாகனங்களை விற்க வகை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 30-40விழுக்காடு வரை விற்பனை வளர்ச்சி என்பது சிறப்பானது என்று கூறியுள்ள அவர், தற்போதைய விற்பனை குறைவை மந்தம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட அவர், அடுத்த ஓராண்டில் 90 முதல் 95விழுக்காடு வளரும் என்று கணித்திருக்கிறார். மின்சார வாகன விற்பனையில் உள்ள பிரச்னைகளை அரசாங்கம் சரி செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, போதுமான சார்ஜிங் உள்கட்டமைப்பு நாடு முழுவதும் தேவைப்படுவதாக சந்திரா குறிப்பிட்டுள்ளார். கார்கள் தயாரிப்பும் எளிமையாகிவிட்டது. கார்களை மக்கள்பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். ஆனால் மக்கள் வாங்கத் தயங்கும் ஒரே பிரச்னையாக சார்ஜிங் கட்டமைப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சில மாநில அரசுகள் சாலைவரியையே மின்சார வாகனங்களுக்கு தள்ளுபடி செய்திருக்கின்றன.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த பல மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. 2026ஆம் ஆண்டுக்குள் 10 புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதில் புதிதாக ஹாரியர் ரக கார்களில் மின்சார வாகனமும், curvv ரக கார்களில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகன விற்பனை 50 விழுக்காடாக இருக்கும் என்றும் டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.