இந்தியாவின் ஜிடிபி மேலும் உயருமா… ?
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி மேலும் வளரும் என்று கணித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி தற்போது உள்ளதைவிட 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 6.7 விழுக்காடாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில்தான் டிவிடண்ட்டாக 2.11லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளித்தது. டிவிடண்ட் கொடுத்தது பற்றி சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், இந்தியாவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் வரும் அக்டோபர் அல்லது டிசம்பர் காலாண்டில் குறைக்க வாய்ப்பு இருப்பதாக ஆரூடம் கூறியுள்ளது. இந்தியாவில் வளர்ச்சிக்கான காரணிகள் வலுவாக இருப்பதாகவும், இந்தியாவின் பணவீக்கம் 4.0 முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கலாம் என்றும் ஜூலை முதல் டிசம்பர் வரையில் பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் விதை விதைப்பதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர். பருவமழையும் இந்தியா முழுவதும் அதிகம் பொழிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்கள் பணவீக்கம் குறையலாம் என்றும், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாகவும்,இந்தாண்டு அக்போடர் முதல் டிசம்பர் மற்றும் ஜனவரி-மார்ச் 2025 ஆகிய காலகட்டத்தில் இந்த வட்டி விகிதம் குறைப்பு அமலாகலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வட்டி குறைக்கப்படலாம் என தெரிகிறது.
இந்தியாவின் பணவீக்க விகிதம் 4 விழுக்காடாக குறைவது என்பது இந்தாண்டின் இரண்டாவது பாதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. மார்ச் மாதம் 7.7 விழுக்காடாக இருந்த உணவுப்பொருள் விலைவாசி, ஏப்ரலில் 7.9விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. பருப்பு, இறைச்சி, மீன், முட்டை, பால், சர்க்கரை மற்றும் நறுமன பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இலக்கு 4 விழுக்காடு அளவுக்கு பணவீக்கம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.