வி நிறுவனத்தில் வீசுமா தென்றல்…?
வோடஃபோன் ஐடியா நிறுவனம் சுருக்கமாக வி என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பெரிய கடனில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியாவை மீட்கும் பணியில் அதன் சிஇஓ அக்சய மூந்த்ரா இறங்கியுள்ளார். பல வங்கிகள்,முன்னணி புரமோட்டர்கள், முதலீட்டாளர்களிடம் இது தொடர்பாக அவர் பேசி வருகிறார். இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் ஒரே தொலைதொடர்பு நிறுவனம் என்ற மோசமான சாதனையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதன் கடன்களை பங்குகளாக மாற்றியுள்ள மத்திய அரசு, வோடஃபோனுக்கு சில சலுகைகளையும் அளித்துள்ளது. இந்த நிலையில்தான்,தற்போது புதிய திட்டங்களை வி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் வேலிடிட்டியை சற்றே குறைக்கவும்,அப்படி குறைத்தால் அது நிறுவன வளர்ச்சிக்கு உதவும் என்றும் மூந்த்ரா தெரிவித்துள்ளார். கடனில் சிக்கியுள்ள வி நிறுவனத்தை மீட்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக குமார மங்கலம் பிர்லா களமிறங்கியுள்ளது அந்த நிறுவனத்துக்கு இழந்த நம்பிக்கையை மீட்டுத்தர உதவியுள்ளது. 3-ஆவது காலாண்டில் 7990 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருந்த வி நிறுவனம் கடந்த காலாண்டில் நஷ்டத்தை சற்றை குறைத்திருக்கிறது. 6418 கோடி ரூபாயாக அந்த நிறுவன இழப்பு மதிப்பிடப்பட்டுள்ளது. 4ஜி சேவையிலேயே தடுமாறி வரும் வோடபோன் நிறுவனத்தில், முதலீடுகள் அதிகம் கிடைத்தவுடன் 5ஜிக்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் மூந்த்ரா தெரிவித்துள்ளார். ஜியோவும் ஏர்டெலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை தரும் நிலையில், அது நெடுநாட்கள் இருக்காது என்றும் மூந்த்ரா கூறியுள்ளார்.