பட்ஜெட்டில் இதை அறிவிப்பாரா நிதியமைச்சர்.?
மத்திய பட்ஜெட் வரும் 23 ஆம் தேதி தாக்கல் ஆக இருக்கிறது. இதில் சேமிப்புகளுக்கான வட்டியின் வரிகளில் தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பழைய வரி செலுத்தும் முறைப்படி,ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பில் வட்டி வந்தால் அதை வரி சலுகையில் பெற முடியும். அதை பெற 80டிடிஏ என்ற விதியை பயன்படுத்த வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு50 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு உள்ளது. 80 டிடிபி என்ற வருமான வரி சட்டத்தில் இதனை பெற முடியும். இந்த நிலையில் சேமிப்பு வட்டிக்கான வரி விகிதம் 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கடன் மற்றும் டெபாசிட் இடையேயான இடைவெளி குறித்தும் கவலைகளை வங்கிகளும்,நிதியமைச்சகமும் எழுப்பியதாக தகவல் கசிந்துள்ளது. புதிய வரி செலுத்தும் முறையில் இது போன்ற எந்தவித சலுகைகளும் கிடைக்காது. புதிய வரி செலுத்தும் முறைப்படி ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் வரி செலுத்தும் முறையில் இனி மாற்றம் வரலாம் என்றும், 5லட்சம் ரூபாய் வரை வரியே கிடையாது என அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போதுள்ள 7 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு உள்ளதும் 8 லட்சம் ரூபாயாக உயரவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.