இன்கிரிமண்ட் லேட் ஆகுமா..?
இந்தியாவில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் சம்பள உயர்வு இருக்கும். ஆனால் தற்போது நிலைமை சரியில்லாததால் இந்த சிக்கலை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. வழக்கமாக ஜூன் காலாண்டில் வந்திருக்க வேண்டிய சம்பள உயர்வு இதுவரை வரவில்லை என்றும், ஏன் காலதாமதமாகிறது என்ற காரணமும் தங்களுக்கு தெரியவில்லை என்றும் நிறுவன ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். வழக்கமாக மூத்த நிர்வாகிகளுக்கு ஜூலை மாதத்தில் சம்பள உயர்வு பரிசீலிக்கப்படும்,ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை,இதற்கு முன்னதாக பெருந்தொற்று நேரத்தில்தான் இதுபோன்ற சம்பள உயர்வை இன்போசிஸ் நிறுவனம் நிறுத்தி வைத்தது. ஆனால் 2021 ஜனவரியிலேயே பழைய சம்பளம் சேர்த்து தரப்பட்டது.
ஜூலை 20ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டின் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 2024 நிதியாண்டில் 4-7 விழுக்காடு அளவுக்கு வருவாய் உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் இந்தளவுக்கு சரிந்துள்ளது. 2023 கடைசி காலாண்டில் தான், வேரியபிள் பே எனப்படும் மாற்றப்படும் சம்பளத்தை 60 விழுக்காடு வரை அந்நிறுவனம் அளித்தது. சந்தையில் சூழல் சரியில்லாததால்தான் குறைவாக சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. வர்த்தக நிலைமை சரியில்லை என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ள நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோரின் அளவும் குறைந்திருக்கிறது என்கிறது அந்த நிறுவன புள்ளிவிவரம்.