தங்கம் விலை குறையுமா???
எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம், எந்த துறைக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை இறுதி செய்யும் அதிகாரம் மத்திய நிதியமைச்சகத்துக்கு உள்ளது. இந்ததுறை கடந்த ஜூலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலையும், சந்தையில் கடத்தல் தங்கத்தின் புழக்கமும் அதிகரித்துள்ளது இந்த சூழலில் தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் வரியை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், நிதித்துறை, தங்க விற்பனையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான இறுதி முடிவை அரசு இதுவரை எடுக்கவில்லை தற்போதுள்ள 12.5% இறக்குமதி வரியை 10%ஆக குறைக்க வேண்டும் என்றும் வணிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. வரி உயர்வு காரணமாக இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி 23% குறைந்துள்ளது. தற்போதுள்ள இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரியை ஒன்றரை விழுக்காடு குறைக்க வேண்டும் என்றும் தங்க வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறக்குமதி வரி குறையும்பட்சத்தில் கடத்தல் தங்கத்தின் அளவும் வெகுவாக குறையும் என்றும் வணிகர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.