மொத்த பங்குகளையும் விற்ற ஸ்ரீனிவாஸ்.,
விப்ரோவின் புதிய தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீனிவாஸ் பால்லியா தனது வசம் இருந்த அனைத்து பங்குகளையும் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார். விப்ரோ நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாஸ், தன் வசம் இருந்த 1 லட்சம் விப்ரோ நிறுவன பங்குகளை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதியை விற்பனை செய்துவிட்டார். இதன் மதிப்பு 5.05 கோடி ரூபாயாக இருப்பதாக மும்பை பங்குச்சந்தை குறிப்பிட்டுள்ளது. பங்குகளை ஸ்ரீனிவாஸ் மொத்தமாக துடைத்து விற்பனை செய்த நிலையில் இது பற்றி விப்ரோ நிறுவனம் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. விரைவில் விப்ரோவின் 4 ஆவது காலாண்டு மற்றும் வருடாந்திர தரவுகளை விப்ரோ வெளியிடவும் இருக்கிறது. இந்தியாவின் 4 ஆவது பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோவில், கடந்த 6 ஆம் தேதி, தலைமை செயல் அதிகாரி தியர்ரி டெல்போர்டே திடீரென ராஜினாமா செய்தார். அவரின் பணிக்காலம் 15 மாதங்கள் இன்னும் எஞ்சியிருந்த நிலையில் திடீரென அவர் பதவி விலகினார். இதையடுத்து ஸ்ரீனிவாஸ் உடனடியாக அந்த பதவியில் அமர்த்தப்படுவதாக விப்ரோ நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தியர்ரி தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது விப்ரோ நிறுவனத்தின் மூத்த பணியாளர்களில் பலர் வெளியேறிவிட்டதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறைந்து, வருவாய் குறைந்துள்ளது. 1992-ல் விப்ரோவில் இணைந்த ஸ்ரீனிவாஸ், படிப்படியாக உயர்ந்து தற்போது அமெரிக்காவில் இருந்தபடி விப்ரோ நிறுவனத்தை கவனித்து வருகிறார்.