மகளிர் முன்னேற்றம் ரொம்ப முக்கியங்க…
ஜி20 என்ற உலகளாவிய மாநாட்டை ஏற்று நடத்தும் பொறுப்புக்கு ஷெர்பா என்று பெயர். இந்த பொறுப்பை முன்னாள் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் ஏற்றுள்ளார். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மகளிரின் முன்னேற்றம் குறித்து ஆக்கபூர்வமாக பேசியுள்ளார். இந்தியா 9 முதல் 10 விழுக்காடு வேகமாக வளரவேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நடக்காது என்று கூறியுள்ளார். இந்தியாவில் கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் தொகை பெண்களாக உள்ள நிலையில் பெண்கள்முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகமுக்கியம் என்று கூறியுள்ளார். இந்தியா ஜி20 மாநாட்டை ஏற்று நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெண்களின் முன்னேற்றத்துக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பயன்களை பெறுபவர்களாக இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்லும் சக்தியாக பெண்கள் திகழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சுயதொழில் முனைவோருக்கான வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளதாக கூறியுள்ள அவர், பெண்களின் பங்களிப்பு இந்த துறையில் அதிகம் வேண்டும் என்றார். ஆண்களைவிட தொலைநோக்குப்பார்வை அதிகம் கொண்டவர்கள் பெண்கள் என்றும் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.உலகிற்கே முன்னோடியாக இந்திய மகளிர் திகழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.