விலைவாசி உயர்வை தடுக்கும் பணி தீவிரம்..
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருப்பவர் சக்தி காந்ததாஸ். பம்பாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் மும்பை இண்டஸ்ட்ரியின் 188 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய சக்தி காந்ததாஸ் , 8 விழுக்காடு வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்தியா சீராக பயணிப்பதாக கூறியுள்ளார். மேலும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2விழுக்காடு உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். 24 நிதியாண்டின் கடைசி காலாண்டில் இருந்து இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வலுவாக இருப்பதாக கூறிய அவர், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் அதே நிலை தொடர்கிறது என்றார். கிராமபுறங்களில் மக்கள் பொருட்களை அதிகம் பணம் கொடுத்து வாங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது ஒரு துறை மட்டுமின்றி பல துறைகளிலும் உள்ளது என்றார். விவசாயத்துறையில் ஏராளமான இலக்குகள் எட்டப்பட்டுள்ளன என்ற அவர், ஆனால் அதே துறையில் மேலும் பல வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்றார். குறிப்பாக விநியோக சங்கிலி மற்றும் மதிப்பு சங்கிலியின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் நல்ல அறிகுறி தெரிவதாக குறிப்பிட்ட சக்தி காந்ததாஸ்,1947-க்கு பிறகு இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமாக ஜிஎஸ்டி இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி வந்ததால் தொழில்கள் தொடங்குவதில் சவுகர்யம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஜிஎஸ்டி வேகமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தியாவின் ஒரு மாத ஜிஎஸ்டி என்பது 1லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஜிஎஸ்டியால் வணிகம் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், போட்டி நிறைந்ததாகவும் மாறிவிட்டது என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.