தவிக்கிறதா தொழிலாளர்களின் பணம்!!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் என்பது இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 27.73 கோடி பேர் தங்கள் சம்பளத்துடன் இணைந்த வைப்பு நிதியை சேமித்து வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பணத்தை எடுத்து ETF வகையிலான ஈக்விட்டியில் சேமிக்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த நிறுவனம் முடிவு செய்தது. இந்த நிலையில் பெரிய தொகையாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இந்த நிறுவனம் ETF வகையில் நிஃப்டியில் சேமித்து வைத்துள்ளது. ஆனால் எந்த நிறுவனத்தில் இந்த பணம் முதலீடாக சேமிக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி தொகையை அதானி குழுமத்தின் துறைமுக நிறுவனம் மற்றும் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இந்த சூழலில் தங்கள் பணம் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது என்ற விவரம் ஏன் வெளியிடப்படாமல் இருந்தது என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் EPFO டிரஸ்டீஸ் எனப்படும் அறங்காவலர் குழுவிலேயே இது தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. முதலீடு செய்த பணம் அதிகரித்திருந்தால் பரவாயில்லை ஆனால் அதிகரிக்கவில்லை என்றும், போட்ட முதலீட்டைவிட குறைவான பணபலன்மட்டுமே கிடைக்கும் என்பதால் அந்த அறங்காவலர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வரும் சூழலில் போட்ட பணம் என்ன ஆகுமோ என்று பலரும் அச்சத்தில் உள்ளனர்.