ராக்கெட் வேகத்தில் உயர்ந்த சொமேட்டோ பங்குகள்..
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் பங்குகள் 14 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன. அந்த நிறுவனம் கடந்த 2021ஆண் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு காலாண்டில் அதிகபட்ச ஏற்றத்தை,குறிப்பாக லாபத்தை பதிவு செய்துள்ளது.86 ரூபாய் 22 பைசாவாக இருந்த அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை வெள்ளிக்கிழமையன்று 98.39 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கடந்தாண்டு அந்நிறுவனம் 186 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருந்த நிலையில் இந்தாண்டு 2 கோடி ரூபாய் லாபம் பதிவாகியிருக்கிறது. மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் 189 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்டிருந்த சொமேட்டோ நிறுவனம் தற்போது லாபகரமாக மாறியுள்ளது. சொமேட்டோவின் மற்றொரு செயலியான பிளிங்கிட் நிறுவன வருவாய் 70.9 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக சொமேட்டோ தெரிவித்துள்ளது.முதல் காலாண்டில் பிளிங்கிட் நிறுவன வருவாய் 1414 கோடியாக இருந்ததாகவும், இது கடந்த காலாண்டில் 2,416 கோடி ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சொமேட்டோ நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் சரியான இடத்தில் சரியான நபர்களை பணியில் வைத்திருப்பதால் இது சாத்தியமானதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். துணிந்து எடுத்த ரிஸ்க் பெரிய லாபத்தை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.