வளர்ச்சியோ குறைவு, பணவீக்கமோ அதிகம்!
ஆனந்த் சீனிவாசன்
சமீப காலத்தில், பொருளாதாரம் பற்றி அரசாங்கம் எதுவுமே செய்ய வேண்டாம், அது தானாகவே மீட்சி அடையும் என்று சொல்கின்றனர், வலதுசாரி பொருளாதார அறிஞர்கள். தங்கள் கருத்துகளோடு உடன்படாதவர்களை அவர்கள், மரண வணிகர்கள் என்று அழைக்கிறார்கள். பெரும் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, உலகமெங்கும் எப்படி பொருளாதார மீட்சி அடைந்ததோ, அதேபோல், இப்போதும் நடைபெறும் என்பதே இந்த பொருளாதார அறிஞர்களின் கருத்து. இந்தக் கருத்து, நான்கு காரணங்களால் தவறானது:
முதல் காரணம், தேவை. பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரினால், மீண்டும் தேவைகள் அதிகமானது. குறிப்பாக, பெருமளவு சேதத்தைச் சந்திக்காக அமெரிக்காவில், அதன் தொழில் துறை திறன்களினால், மீண்டும் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டது. தற்போதைய சூழலில், தேவையை அதிகரிப்பதற்காக, ஒரு போர் இல்லை. அதற்கு மேல், கொரோனா பெருந்தொற்றினால், தேவைகள் முற்றிலும் சிதைந்துபோயுள்ளன. ஏனெனில், எண்ணற்ற வேலைகள் பறிபோயுள்ளன. எங்கெல்லாம் வேலைகள் தக்கவைக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம், சம்பள வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு விவரங்களையும், சி.எம்.ஐ.இ., மற்றும் இதர ஆய்வு அமைப்புகளின் சர்வேக்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சூழலில், மேலை நாடுகள், பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஏராளமான பணத்தைச் செலவழிப்பது ஒன்றே பிரகாசமான முயற்சியாக தெரிகிறது.இந்திய ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தவரை, சரக்குப் போக்குவரத்து கட்டண உயர்வும், கண்டெய்னர்களின் பற்றாக்குறையும் மிகமுக்கியமான தடைக்கற்களாக உள்ளன. இதர நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடும்போது, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைவதும் மிக முக்கியமான பிரச்னை. உலக அளவில் பெருகிவரும் தேவையை, நன்கு பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் இருப்பது இந்திய தொழில்நுட்ப துறை மட்டுமே.
அடுத்தது, பணவீக்கம். கடந்த இரண்டு காலாண்டுகளாக, இந்தியாவின் வளர்ச்சி தேக்கத்தில் இருந்து சரிவை நோக்கி நகர்ந்துளது. தற்போதைய காலாண்டில், ஏதேனும் முன்னேற்றம் தெரியுமானால், அது கற்பனையானதாகவே இருக்கும். ஏனெனில், கடந்த ஆண்டின் இதே முதல் காலாண்டில் ஏற்பட்ட எதிர்மறை வளர்ச்சியோடு ஒப்பிடப்படும்போது, ‘குறைந்த அடித்தள விளைவு’ என்ற பாதிப்பு ஏற்படும். அதாவது, கடந்த ஆண்டு மதிப்பீடுகளை இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, முந்தைய மதிப்பீட்டை அடித்தளமாக எடுத்துக்கொண்டு, இந்த ஆண்டு வளர்ச்சியை சதவீத கணக்கில் முன்வைப்போம். கடந்த ஆண்டு, அடித்தள மதிப்பீடே குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் எந்தச் சிறு வளர்ச்சியும், கணிசமான வளர்ச்சி விகிதமாகவே தோன்றும். ஒப்பீட்டளவில், உண்மையான வளர்ச்சி விகிதம் என்பது பொருட்படுத்தக்க அளவு இருக்கப் போவதில்லை இந்தச் சூழ்நிலை, 1970களில், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தது போலவே, அதாவது, உயரும் பணவீக்கத்தோடு இணைந்த குறைவான வளர்ச்சியை ஒத்து இருக்கிறது.
இந்தியாவில் காரணங்கள்
உற்பத்தி பொருட்களின் விலை உயர்வினாலும், உலக அளவில் நிதிப் புழக்கம் மிக அதிக அளவு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பல்வேறு சொத்துகளின் பணவீக்கத்தினாலும், இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தில் ஒரு பகுதியை, இந்திய சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்த பங்குச் சந்தைகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவின் சந்தைகள் பெருமளவு வளரவில்லை. அதனால், ஏராளமான மூலதனம் இங்கே வரும்போது, பல்வேறு சொத்துகளின் விலைகள் ஊதிப் பெரிதாகின்றன. இது வரவேற்கத்தக்க நிலை தான் என்றாலும், இந்திய மக்களில் பெரும்பாலோனோர் பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்யவில்லை என்பதைப் பார்க்கும்போது, இந்த விலையேற்றத்தின் பலனை அனுபவிக்க முடியாது. இத்தகைய நிதிச் சந்தைகளில் பங்குபெறும், பணக்கார உயர் பிரிவினர் மட்டுமே, மேன்மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். மத்திய தர வர்க்கத்தினரும் கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், மோசமான மறைமுக வரிகளாலும், அதிகமான பணவீக்கத்தாலும் பாதிக்கப்படுவதோடு, இதே பணவீக்கத்தினால், தங்கள் சொத்துகளின் மதிப்பு சரிவதையும் பார்ப்பார்கள். குறிப்பாக, கீழ் மத்திய வர்க்கத்தினரிடம் அடிப்படை சொத்தான தங்கம் கூட கையில் இல்லை என்பதால், அவர்களுக்கு பணவீக்கம் மிகப்பெரிய பாதிப்பாகவே இருக்கும்.
எரிபொருள் விலைகள்
மேலும், இந்தியாவில் நான் காணும் பணவீக்கத்துக்கு மற்றொரு காரணம், உற்பத்தியில் இருந்து சந்தைக்குச் செல்லும் வினியோக நடைமுறையில் உள்ள பல்வேறு சிக்கல்களே. கொரோனா பெருந்தொற்றாலும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாலும், பொருட்களின் வினியோகம் தடைபட்டுள்ளது. அதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும், எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் கடுமையான வரிகளும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. எரிபொருட்களின் விலையேற்றத்தினால், சரக்குப் போக்குவரத்து செலவுகள் உயர, அது பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், எரிபொருட்கள் விலையேற்றத்தினால், பொதுமக்களின் மாதாந்திர செலவுகள் உயர்ந்து, அதன் காரணமாக, அவர்கள் சம்பள உயர்வு கோருவார்கள். இதன்மூலம், பணவீக்கம் மற்றும் வளர்ச்சித் தேய்மானம் என்ற அபாயகரமான சுழற்சி ஏற்படுகிறது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியோ இதை வேறு மாதிரி பார்க்கிறது. இந்தப் பணவீக்கம் என்பது கடந்துபோகும் தன்மை உடையது என்றும் ஆனால், பணவீக்க செலவுகள் என்பவை ஆழமானவை என்று அது கருதுகிறது. பணவீக்கம் தொடரவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ஆர்.பி.ஐ., அரசாங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கும் திட்டமான ஜி-சாப்பில் ஈடுபட்டு, பெருமளவு பணபுழக்கத்தை ஏற்படுத்தும் கொள்கையில் இருக்கிறது. அரசாங்க கடன் பத்திரங்களை 6 சதவிகிதத்துக்கு நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தனியார் பெரு நிறுவனங்கள், புதிய முதலீடுகளைச் செய்யாமல், தங்கள் பற்றுவரவு கணக்கை வலிமைப்படுத்திக்கொள்ள முனைவதன் மூலம், வட்டி விகிதங்கள் மேலும் கூடுகின்றன.
மூன்றாவது, வட்டி விகிதங்கள். பணவீக்கத்தின் பாதிப்புகள் சமூகத்தில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ளும் எந்த ஒரு மத்திய வங்கியியலாளரும், நிச்சயம் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, பணத்தின் செலவை உயர்த்தவே செய்வார். இதன்மூலம், பணவீக்கம் குறையவில்லை என்றால், இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ, அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ, ‘ரெப்போ’ விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும். பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது சிரமப்படுத்தும் நடவடிக்கை. அதன்மூலம், பொருளாதாரத்தில் மிச்சமுள்ளவை கடும் பாதிப்புகளைச் சந்திக்கும். வட்டி விகிதங்கள் உயருமானால், அது நாட்டில் உள்ள மொத்த தேவையைக் குறைக்கும், அதன்மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் குறைவாக செலவு செய்வார்கள், பெருநிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்துக்கொள்ளும்.
வாராக்கடன் பற்றி
இறுதியாக, உயரும் வாராக்கடன்கள் பற்றி பேசுவோம். உயரும் வட்டி விகிதங்கள், போதுமான பணப்புழக்கம் இல்லாமை ஆகியவற்றோடு, ஏற்கெனவே கடன் வாங்கிய நிறுவனங்களுக்கே கடன் கொடுக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நேரடி மானியங்கள் வழங்குவதற்குப் பதில், கடன்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால், பொதுத் துறை வங்கிகளில், வாராக்கடன்கள் வேகமாக உயர்கின்றன. நமது சிறு, குறு தொழில்கள், ‘மின்ஸ்கி தருணம்’ என்ற பிரச்னையைச் சந்திக்கின்றன. ஹைமன் மின்ஸ்கி என்ற பொருளாதார ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட ‘மின்ஸ்கி தருணம்’ என்பதன்படி, ஒவ்வொரு கடன் சுழற்சியிலும் மூன்று தனித்தனி நிலைகள் உண்டு. முதல் நிலையில், பாதிப்புகளைச் சந்திக்க விரும்பாத வங்கியாளர்கள், எச்சரிக்கையுடன் கடன் வழங்குவார்கள். அசலையும் வட்டியையும் ஒழுங்காகச் செலுத்து நம்பிக்கையான கடன்காரர்களுக்குக் கடன் கொடுப்பது இரண்டாம் நிலை. மூன்றாவது நிலை என்பது உற்சாக நிலை. இதில், சொத்துகளின் மதிப்பு கடுமையாக உயரும்போது, கடன்காரர்களால் அசலைக் கட்ட முடியுமா, வட்டியைச் செலுத்த முடியுமா என்றெல்லாம் பார்க்காமல், கடனை வாரி வழங்குவது.
மின்ஸ்கி தருணம்
சொத்துகளின் மதிப்பு சரிந்து, அதன்மூலம் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்ள, கடன்காரர்களால், அசலையும் வட்டியையும் செலுத்த முடியாமல் போகும் தருணமே, ‘மின்ஸ்கி தருணம்’ குறிப்பிடுகிறது. இந்தியா இத்தகைய மின்ஸ்கி தருணத்துக்கு வந்துவிட்டது. தற்போது, வாராக்கடன்களை ஈடுசெய்வதற்கு பெருமளவு நிதி மூலதனம், நமது பொதுத் துறை மற்றும் இதர துறை வங்கிகளுக்குத் தேவைப்படுகிறது. கடந்த 18 மாதங்களில், பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உருக்குலைந்து போய்விட்டன. மத்திய பட்ஜெட்டால், பெரும் மூலதனத்தை இத்தகைய வங்கிகளுக்கு தரமுடியவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்றது போல், சிற்சில முயற்சிகளை மட்டுமே நம்மால் எதிர்பார்க்க முடியும். மேலே சொன்ன காரணங்களால், கடன் வளர்ச்சி, எப்போதும் இல்லாத அளவுக்கு 5.6 சதவிகிதமாக உள்ளது. வங்கிகள் மேலும் கடன் கொடுத்து, சிரமப்படத் தயாராக இல்லை. தற்போது வெளியே வரும் பல மாதங்களாக தேங்கிப் போன தேவைகள் நிறைவுபெற்றவுடன், ரியல் எஸ்டேட் மற்றும் வாகனச் சந்தைக்குத் தேவைப்படும் பணம் கிடைக்காமல், சூழ்நிலை மேலும் மோசமாகும். இந்தியப் பொருளாதாரம் குறைவான வளர்ச்சி மற்றும் உயர் பணவீக்கம் என்ற விழச் சுழலில் சிக்கியுள்ளது. தேவைகளையும் வளர்ச்சியையும் உயர்த்தும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் வரை இது தொடரும். கொள்கை ரீதியான தலையீடு இல்லாதவரை, இந்தியா ‘கே’ வடிவ வளர்ச்சியையே பெறும். இதில், கடன்சுமை குறைவாக பெருநிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளத்தைப் பணயம் வைத்து, முன்னேற்றத்தை அடையும். சிறு, குறு நிறுவனங்களே அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன என்பதால், மேற்கண்ட சூழலில், வேலைவாய்ப்புகளும் பெருமளவு உயராது என்பதே அர்த்தம்.